இந்திய கிரிக்கெட்டில் இந்த வீரர் தான் சிறந்தவர், இல்லை எங்கள் வீரர் தான் பெரிய கிரிக்கெட்டர் என்ற ரசிகர்கள் சண்டை முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது சச்சின், கவாஸ்கர், தோனி, கோலி, ரோஹித், கில் என அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் குறித்து முன்னாள் இந்தியா வீரர் அஷ்வின் தன் யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒவ்வொரு அணியின் பகுப்பாய்வு பற்றி அஷ்வின் தனது யூடியூப் சேனலில் வீடியோக்கள் செய்து வருகிறார். அப்போது இந்திய அணியில் இருக்கும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் குறித்து கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ” கிரிக்கெட்டையும் அதை விளையாடும் வீரர்களையும் இயல்பான்வர்களாக பார்க்க வேண்டும். அப்போது மட்டுமே இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் மாறும். அனைவரும் விளையாட்டு வீரர்களே ஒழிய யாரும் சினிமா நடிகர்கள் அல்ல. “
” அனைத்து வீரர்களும் இயல்பானவர்களாக இருக்கும் போது எளிய மக்களும் அவர்களை ஒப்பிட்டு பார்ப்பார்கள். ரோஹித் ஷர்மா, விராட் கோலி சதம் விளாசினால், அது அவர்கள் படைத்திருக்கும் சாதனைகளுடன் கூடுதல் ஒன்றாக இணையும், அவ்வளவு தான். தனி வீரர் சாதனையைத் தான் போட்டியும் அணியின் இழக்கும் தான் முக்கியமாக கருதப்பட வேண்டும். ” என்றார் அஷ்வின்.
இதற்க்கு முன்பு அவர் பல வீடியோக்களில் இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் பற்றி விவரித்துள்ளார்.. இந்திய அணியின் முக்கிய வீரர்களே அவர்களுக்கு செய்யும் மார்கெட்டிங் குறித்தும் ஓப்பனாகப் பேசியுள்ளார். ஐ.பி.எலில் துவங்கும் இந்த ரசிகர் சண்டை, இந்திய அணியிலும் தொடர்கிறது.
இந்திய அணியில் ஒரு வீரர் சரியாகச் செய்யவில்லை என்றால், ஐ.பி.எல் ரசிகர்கள் இந்திய அணி என்றும் பாராமல் அந்த வீரரை கலாய்க்கத் துவங்கி அது வெறுப்பாக பின்னால் மாறுகிறது. இதற்கெல்லாம் மூலக் காரணம், சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் தான். அது ஒழிந்தால் மட்டுமே இந்தியாவில் கிரிக்கெட்டை கிரிகெட்டாக ரசிகர்கள் பார்ப்பார்கள்.

