கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் நியூசிலாந்து அணி இறுதிக்கட்டம் வரை ஆட்டத்தை விட்டுக் கொடுக்காமல் போராடியது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியூசிலாந்து அணியை பாராட்டி பேசி இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு இந்திய அணி விளையாடிய நிலையில் 234 ரன்கள் 3 விக்கெட்டுகள் இழந்த போது வரை ஆட்டம் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி இறுதிக்கட்டத்தில் போராடி வெற்றியை பெற வேண்டியிருந்தது.
இதுகுறித்து அஸ்வின் கூறும் போது “பல முன்னணி அணிகள் பகுப்பாய்வு செய்து அதன் வழி விளையாடுவது கிடையாது. ஆனால் நியூசிலாந்து அணி இந்தத் திட்டத்தை கடைபிடித்து சிறப்பாக விளையாடி வருகிறது. நான் அவர்களுடைய அணி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் எவ்வாறு திட்டமிடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். அதற்காக நான் பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். நியூசிலாந்து அணி கடைசி வரை போராடியதற்காக நாம் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

