மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா கடந்த 10 இன்னிங்ஸ்களாக தடுமாறி வரும் நிலையில் அவருடைய கேப்டன்சியும் முன்பு போல் பெரிய அளவில் எடுபடவில்லை.
மறுபுறம் விராட் கோலி பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு தொடர்ந்து சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தொடர்ந்து ஒரே மாதிரி விராட் கோலி ஆட்டம் இழந்து வருவது ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இருவரும் ஓய்வு பெறுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில காலம் விளையாடுவார் என்று நினைக்கின்றேன்.
அவர் எப்படி ஆட்டம் இழந்தார் என்பதை மறந்து விடுங்கள். ஏனென்றால் அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கூட விளையாட முடியும்.ஆனால் ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். டாப் ஆர்டரில் நீங்கள் விளையாடும்போது உங்களுடைய புட் வொர்க் முன்பு போல் இல்லை.
சில நேரம் பந்தை அடிக்கும் விதத்தில் கூட ரோஹித் சர்மா தவறு செய்கின்றார். பந்தை மிகவும் தாமதமாக அடிக்கின்றார். எனவே ரோகித் சர்மா இந்த தொடர் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து முடிவெடுப்பார் என நினைக்கின்றேன்.
ஆனால் ரோகித் சர்மா அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைக்கின்றேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டிராவைப் பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் சொற்ப
ரன்களில் ஆட்டம் இழ்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக ரோகித் சர்மா 40 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே சேர்த்து இருக்கிறார். இதேபோன்று விராட் கோலி 29 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜடேஜா, நிதீஷ்குமார் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி இருக்கிறார்கள். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

