இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட், ஓய்வில் இருந்தார். அவருக்கு பதிலாக இளம் வீரர் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். ரிஷப் பண்ட் பேட்டிங் மட்டுமே ஆடினார்.
2வது இன்னிங்சில் பேட்டிங் ஆடிய போது, ரிஷப் பண்ட் காயத்தால் தவித்தது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென்டஸ்காட்டே பேசும் போது, 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ரிஷன் பண்ட் விளையாட வாய்ப்புகள் உள்ளது என்றார்.
ரிஷப் பண்ட் ஃபார்ம்
இந்திய அணியின் ரிஷப் பண்ட் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். 3 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 2 சதம், 2 அரைசதம் உட்பட 445 ரன்களை விளாசி இருக்கிறார். அவரின் ஃபார்ம் காரணமாக ரிஷப் பண்டை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்க இந்திய அணி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் முடிவுக்கு ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ரவி சாஸ்திரி பேசும் போது, 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட களமிறக்கப்பட்டால், அவர் நிச்சயம் குறைந்தபட்சம் ஃபீல்டிங் செய்ய வேண்டிய தேவை இருக்கும். அப்படி ஃபீல்டிங் செய்தால், சூழல் இன்னும் மோசமாகிவிடும். விக்கெட் கீப்பிங் கிளவ்ஸ் இருந்தால் கூட, குறைந்தபட்சமாக விரலில் பாதுகாப்பு இருக்கும்.
ரவி சாஸ்திரி எதிர்ப்பு
ஆனால் ஃபீல்டராக இருந்தால், விரலில் எந்த பாதுகாப்பும் இருக்காது. ஒருவேளை விரலில் ஏதாவது காயம் ஏற்பட்டால், பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும். காயத்தை அதிகப்படுத்தினால், ரிஷப் பண்ட் எதிர்காலமே சிக்கல் தான். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே ரிஷப் பண்டால் செய்ய முடியும்.
ஒருவேளை விரலில் எலும்பு முறிவு ஏதாவது ஏற்பட்டிருந்தால், நிச்சயமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். 4வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டு, கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வர 9 நாட்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

