இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள சூழலில், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று விவாதங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்க வேண்டும். இது கேஎல் ராகுலுக்கு மிகப்பெரிய தொடராக இருக்கும். இந்திய அணியில் அதிக அனுபவம் கொண்ட வீரர் அவர்தான்.
ரவி சாஸ்திரி தேர்வு
கடந்த முறை இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி ஒரு சதம் விளாசினார். அதனால் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்பர் 3 பேட்ஸ்மேனாக இளம் வீரர் சாய் சுதர்சன் களமிறங்க வேண்டும். நான் பார்த்தவரையில், சாய் சுதர்சன் மிகவும் ஈர்த்துவிட்டார். இந்த டெஸ்ட் தொடர் அவருக்கு மிகப்பெரிய கதவுகளை திறக்கும்.
அதேபோல் நம்பர் 4 பேட்ஸ்மேனாக கேப்டன் சுப்மன் கில் களமிறங்க வேண்டும். 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவருக்கு போதுமான அனுபவம் உள்ளது. மிடில் ஆர்டரை பொறுத்தவரை தற்போதைய ஃபார்மை பொறுத்து முடிவு செய்ய வேண்டும். கருண் நாயர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் நம்பர் 6ல் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும்.
பிளேயிங் லெவன்
கருண் நாயர் சிறந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் அவ்வளவு அதிக ரன்களை விளாசி இருக்கிறார். அவர் பிசிசிஐ கதவுகளை தட்டவில்லை. உடைத்துவிட்டு வந்திருக்கிறார். அவ்வளவு எவ்வளவு அதிக ரன்களை விளாசி இருந்தால், 7 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பார் என்றால் புரிந்து கொள்ளுங்கள். நம்பர் 7ல் ஷர்துல் தாக்கூர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஒருவர் விளையாட வேண்டும்.
யாரால் அதிக ஓவர்கள் வீச முடிகிறதோ, அவர்கள் விளையாடலாம். நிதீஷ் குமார் ரெட்டி 14 ஓவர்களை வீச முடிந்தால், அவருக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏனென்றால் அவரால் எளிதாக அரைசதம் அடிக்க முடியும். மற்ற 3 வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை சேர்த்தாலும் சரிதான் என்று கூறி இருக்கிறார்.

