நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். மேலும் நேற்று பேட்டிங் செய்கையில் சூரியகுமார் யாதவ் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக ஆடுகளத்தை புரிந்து கொண்டு விளையாடினார் என்பது குறித்தும் விளக்கமாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் நேற்று மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். உண்மையில் நாங்கள் ஒரே மாதிரி அதிரடியாக தான் விளையாடுவோம் என்று ஆரம்பத்தில் அவர் சொல்லி இருந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். ஆனால் நேற்று அவர் அப்படி எல்லாம் செய்யவில்லை. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிரமமாக இருப்பதை உணர்ந்த அவர் தன்னை மாற்றிக் கொள்வதற்கு தயாராக இருந்தார்”
“மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடிய விதத்தில் அவரும் ஆடி இருந்தால் இந்திய அணி 120 ரன்னில் சுருண்டு இருக்கும். இது அமெரிக்க அணிக்கு வெற்றி பெறும் நம்பிக்கையை அதிகம் ஆக்கி இருக்கும். ஆனால் சூரியகுமார் யாதவ் ஆடுகளத்தில் முன்புறம் விளையாடுவதற்கு கடினமாக இருந்ததால் பந்தின் வேகத்தை பயன்படுத்தி மற்ற இடங்களில் விளையாடினார். இது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவரிடம் நான் பார்த்த பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் ஒரு கேப்டனாக நிலைமையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருந்ததுதான்” என்று கூறியிருக்கிறார்.

