இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத் தொடர்பான துலீப் டிராபி இன்று தொடங்கி இருக்கிறது. இதில் ரஜத் பட்டிதர் தலைமையிலான மத்திய மண்டல அணியை எதிர்த்து வடகிழக்கு மண்டல அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டல அணியின் கேப்டன் ஜெஹு ஆண்டர்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
சதம் விளாசிய ரஜத் பட்டிதர்
இதன்பின் களமிறங்கிய மத்திய மண்டல அணிக்காக ஆயுஷ் பாண்டே – ஆர்யன் ஜுயல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆயுஷ் பாண்டே 3 ரன்களில் ஆட்டமிழக்க, டனிஷ் மாலேவர் – ஆர்யன் ஜுயல் இணை சேர்ந்தது. இதில் சிறப்பாக ஆடிய அரைசதம் அடித்த ஆர்யன் ஜுடல் 60 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.
இதன்பின் டனிஷ் மாலேவர் – ரஜத் பட்டிதர் கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக ரன்களை சேர்க்க, டனிஷ் மாலேவர் விரைவாக சதத்தை எட்டினார். மறுபக்கம் சிக்சரும் பவுண்டரியுமாய் விளாசி தள்ளிய ரஜத் பட்டிதர் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அதிரடியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற ரஜத் பட்டிதர் 80 பந்துகளில் சதத்தை எட்டினார்.
அசத்திய ரஜத் பட்டிதர்
சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதர் 96 பந்துகளில் 3 சிக்ஸ், 21 பவுண்டரி உட்பட 125 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய டனிஷ் மாலேவர் 198 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டம் முடிவில் மத்திய மண்டல அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 432 ரன்களை குவித்துள்ளது. ரஜத் பட்டிதரின் அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டதோடு, 2 வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 2 போட்டிகளில் ரஜத் பட்டிதர் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் வெளியேற, இதன்பின் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதர் கோப்பையை வென்றதோடு, பேட்டிங்கிலும் அபார ஃபார்மில் உள்ளார். இதனால் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

