ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் ரியான் பராக்கை கேப்டனாக கொண்டு வர முயற்சிகள் நடந்தது பிடிக்காமல், ராகுல் டிராவிட் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி நிர்வாகம் புரமோஷன் கொடுத்த போதும், ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்ளவில்லை.
டி வில்லியர்ஸ் கருத்து
இந்த விவகாரம் இந்திய ரசிகர்களிடையே விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் பேசும் போது, ராகுல் டிராவிட்டை வெளியேற்றியது அந்த அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகம் எடுத்த முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் ராகுல் டிராவிட்டுக்கு இன்னும் பெரிய ரோல் கொடுக்க முன் வந்துள்ளார்கள். ஆனால் அதனை அவர் மறுத்து விலகி இருக்கிறார்.
ராகுல் டிராவிட்டுக்கு அது பிடிக்காமல் விலகி இருக்கலாம். அவர் இன்னும் ஓய்வறையில் இருந்து பணியாற்றுவதை விரும்பி இருக்கலாம். அது அவருடைய முடிவு தான். நிச்சயம் அவர்கள் பேசும் போது உண்மைகள் வரலாம். இருந்தாலும் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. அவரது இடத்திற்கு வருபவருக்கு நிச்சயம் அழுத்தம் இருக்கும்.
ராஜஸ்தான் அணியின் சிக்கல்
கால்பந்து லீக் தொடர்களில் ஒரு பயிற்சியாளர் சொதப்பினால் பல்வேறு வழிகளில் இருந்தும் கருத்துக்கள் வரும். ஒரு கட்டத்தில் உரிமையாளர்களிடம் இருந்து ஆலோசனைகள் வரத் தொடங்கும். வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல்கள் உருவாகும். ராஜஸ்தான் அணிக்கும் அடுத்து வரும் சீசன்களில் புதிய சிந்தனைகள் இருக்கலாம்.
அது ராஜஸ்தான் அணியை கொஞ்சம் ஆட்டி இருக்கிறது. என்ன நடந்தாலும் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து முன்னேறும் வழிகளை கண்டறிய வேண்டும். கடந்த மெகா ஏலம் அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை. பட்லர், சாஹல், அஸ்வின் என்று ஏராளமானோரை அந்த அணி இழந்தது. இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

