சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ பிரிவில் இன்று நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வென்றால் அரை இறுதி நிச்சயம் மற்றும் வங்கதேசம் தோற்றால் நாக் அவுட் என்பதால் இப்போட்டி மிக முக்கியமான ஒன்றானது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச முடிவு செய்தார். ராவில்பின்டி மைதானல் பேட்டிங்க்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் பிட்ச் பற்றி கூறியிருந்தனர். அதற்கேற்ப வங்கதேச அணியும் ஓரளவு சமாளித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது.
20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 20 ரங்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து சரிந்தது. எனினும் நஜ்முள் ஹுசைன் சாண்டோ நின்று ஆடி 77 முக்கிய ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஜேக்கர் அலி – ரூபல் ஹுசைன் பார்ட்னர்ஷிப் அணிக்கு நல்ல முடிவைத் தந்தது. ஜேக்கர் அலி 45 ரங்களுக் ரூபல் ஹுசைன் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 236/9 என முடிந்தது.
நியூசிலாந்து பந்துவீச்சில் பிரேஸ்வெல் வெறும் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். மற்றபடி வில்லியம் 2, ஹென்றி மற்றும் ஜேமிசன் 1 விக்கெட் எடுத்தனர். 237 ரங்களைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே பெரியச் சரிவு. கடந்தப் போட்டியில் சதம் விளாசிய வில் யங் டக் அவுட், வில்லியம்சன் 5 என பெவிலியன் திரும்ப நியூசிலாந்து ஸ்கோர் 15/2 என மாறியது.
அதன் பின்னர் கான்வே – ரச்சின் ஜோடி சேர்ந்து 57 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவு எடுத்துச் சென்றன. கான்வே 30 ரன்களில் அவுட் ஆனார். பிறகு ரச்சினுடன் டாம் லேதம் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து ஆடி நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதிச் செய்தனர். ரச்சின் ரவீந்திரா அற்புதமான சதம் விளாசி 112 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணிக்காக ஐசிசி தொடரில் அதிக சதங்கள் விளாசியப் பட்டியலில் கேன் வில்லியம்சனை முந்தி முதலிடம் பிடித்துள்ளார். 11 இன்னிங்சில் 4 சதங்கள் அடித்துள்ளார் ரச்சின் ரவீந்திரா.
மறுபக்கம் டாம் லேதம் தன் நல்ல ஃபார்மைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் அரை சதம் அடித்தார். இறுதியில் பிலிப்ஸ் – பிரேஸ்வெல் ஜோடி போட்டியை முடிக்க நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியும் அரை இறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது. மேலும் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

