முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம் ஏற்பட்டது. ஃபீல்டிங்கின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த போது, அந்த பந்து முகத்தில் அடித்தது. இதனால் களத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதன்பின் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய வில் யங் அபார சதம் விளாசி அசத்தினார். அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இன்று வங்கதேச அணிக்கு எதிரான களமிறங்கியது.
மாஸ் கம்பேக்
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட்டிருந்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களை சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் வங்கதேச அணி மொத்தமாக 181 டாட் பால்களை விளையாடியது. நியூசிலாந்து அணி தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் – கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முதல் ஓவரிலேயே வில் யங் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த வில்லியம்சன் 5 ரன்களில் பெவிலியன் சென்றார். இதனால் நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
புதிய வரலாறு
அப்போது களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தின் கட்டுப்பாட்டை மொத்தமாக கையில் எடுத்து கொண்டார். சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 50 பந்துகளில் அரைசதத்தை கடக்க, இதன்பின் பவுண்டரிகளாக விளாச தொடங்கினார். அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பவுலர்கள் திணற, கண் மூடி இறப்பதற்குள் 90 ரன்களுக்குள் மேல் சென்றார். தொடர்ந்து 95 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தியுள்ளார்.
இதன் மூலமாக காயத்திற்கு பின் விளையாடும் கம்பேக் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தி இருக்கிறார். ஐசிசி தொடர்களில் ரச்சி ரவீந்திரா அடிக்கும் 4வது சதம் இதுவாகும். இதன் மூலமாக நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தொடர்களில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்திற்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளார்.

