உண்மைய சொன்னா.. ஹர்பஜன் இடத்துக்கு வந்த என்ன.. ரொம்ப சந்தேகப்பட்டாங்க.. ஐபிஎல் பிரச்சனை- அஸ்வின் பேட்டி

சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் சதம் அடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது. இவர்கள் இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 199 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்தியா முதலில் 376 ரன்கள் எடுக்க முடிந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் பங்களாதேஷ் அணி அபாரமாக பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பின்பு ஐபிஎல் பிரசன்னா உடன் நேர்காணலில் பங்கேற்ற அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக இடம் பெற்ற போது தன்னுடைய திறமை குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்தது என தெரிவித்தார். இளம் வயது முதலே ஹர்பஜன் சிங்கை ரோல் மாடலாக நினைத்து அவரைப் போன்றே பந்து வீச முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய அஸ்வின் ” ஐபிஎல் போட்டி தொடர்களில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து 2011 ஆம் வருடம் இந்திய டெஸ்ட் அணியில் எனது ரோல் மாடல் ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது பலரும் என்னுடைய திறமை குறித்து சந்தேகப்பட்டனர். ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டதால் என்னால் ஹர்ப்பஜன் சிங் இடத்தை நிரப்ப முடியுமா.? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தனது கிரிக்கெட் குறித்து பேசிய அஸ்வின் “எப்போதும் தன்னை ஒரு பந்துவீச்சாளராக முன்னிறுத்துவதாக தெரிவித்திருக்கிறார். பேட்டிங் என்பது இயற்கையாக என்னோடு கலந்தது. ஆனாலும் பேட்டிங் செய்யும்போது என்னுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் பிரித்துப் பார்ப்பதாகவும்” அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை டெஸ்ட் போட்டி குறித்து பேசிய அஸ்வின் இந்த சதம் மிகவும் ஸ்பெஷல் ஆனது என தெரிவித்தார். அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது போராடி மீட்பது எப்போதுமே சிறப்பான ஒரு அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்த அஸ்வின் இதற்கு முன்பு தனது அணியின் சக வீரர்கள் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் தனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சதம் அடித்த 2 நாட்களுக்கு அந்த உணர்வு அப்படியே இருந்ததாக தெரிவித்த அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது மிகச் சிறந்த அனுபவம் என கூறினார். மேலும் இங்கு கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் ரசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே அலாதியான அனுபவம் என தெரிவித்த அஸ்வின் இதே மைதானத்தில் பல டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து கண்டு ரசித்ததாக தெரிவித்தார். அதே மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்பு கிரிக்கெட் விளையாடுவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சிறப்பான தருணம் என கூறினார்.

இந்திய அணிக்காக இதுவரை 101 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் 522 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 37 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்துள்ளார். சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். மேலும் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 3,422 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 14 அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 சதங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட முறை 5 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அஸ்வின். இந்த சாதனைகளின் மூலம் தன்னுடைய ரோல் மாடலான ஹர்பஜன் சிங்கை விட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை ரவிச்சந்திரன் அஸ்வின் பதித்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles