ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரை தங்கள் அணி வெல்ல முடியும் என்று பேசியிருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராக பாகிஸ்தான் சென்று ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. எனவே ஆஸ்திரேலியா அணி இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்பொழுது ” எங்களுடைய வீரர்களால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியில் இருந்து சீக்கிரம் வெளியில் வந்து சிறப்பாக செயல்பட முடியும். நாங்கள் இதேபோல 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை தோற்று இருந்தோம். ஆனால் நாங்கள் அந்த டி20 உலகக் கோப்பை தொடரை வென்றோம்”
“உலகத்திலேயே அதிசக்தி வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஸ் மற்றும் ஹெட் எங்களிடம் இருக்கிறார்கள். நடு வரிசையில் தனியாக போட்டியை வெல்லக்கூடிய டிம் டேவிட் மற்றும் மேக்ஸ்வெல் இருக்கிறார்கள். இத்துடன் ஏற்கனவே துணை கண்டத்தில் சுழல் பந்துவீச்சில் தன்னை நிரூபித்திருக்கும் ஆடம் ஜாம்பா இருக்கிறார். எனவே நாங்கள் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

