நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ‘வாஸ்அவுட்’ செய்யப்பட்டது. ஆகையால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து டெஸ்ட் தொடரையும் இந்திய அணி, எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது. இந்திய அணி தோல்வி பெறும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேற வேண்டும்.
இந்திய நட்சத்திர வீரர்களான, கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சமீப காலங்களில் டெஸ்டில் தொடரில் தங்களுடைய ஃபார்மிற்காக போராடி வருகின்றனர். எனவே, இருவரும் இனி வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, “ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களது பேட்டிங் வரிசையை மாற்றி இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்”.
ஆர்டரை கொஞ்சம் மாத்துங்க:
டேனிஷ் கனேரியா கூறியதாவது, “ரோகித் சர்மாவுக்கு போட்டியின் துவக்க வீரராக விளையாடுவதில் அச்சம் இருக்கிறதா? அவர் ஒரு துவக்க வீரராக வர வேண்டுமா அல்லது அவரது வரிசையை சற்று மாற்றி, இரண்டாவது வீரராக வர வேண்டுமா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் சமீப காலமாக சற்று தடுமாறிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, சவுதியிடம் இருமுறை வெளியேற்றப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இன்னும் பந்து வேகமாக நகரும். எனவே, நீங்கள் அதை எப்படி கையாளுவது என்று பார்க்க வேண்டும்“
மேலும் அவர், “இந்தியாவின் துவக்க வீரர்களாக, ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருக்க வேண்டும். ரோகித் சர்மா மூன்றாவது வீரராக இருக்க வேண்டும் மேலும் விராட் கோலி நான்காவது வீரராக களம் இறங்க வேண்டும். தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர், இந்திய அணியின் நீண்ட பேட்டிங் வரிசையை சரி பார்த்து நிர்வாகிக்க வேண்டும், ஏனென்றால் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் வலுவான பேட்டர்களாக இருக்கிறார்கள் அல்லவா“ என்று கூறினார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஐந்து போட்டிகளில் 13.30 சராசரியில் ஒரு அரைசதத்துடன், 133 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மறுபுறம், கோலியும் ஒரு அரை சதத்துடன் 21.33 சராசரியில் 192 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா தொடரில் தங்களது தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

