சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ஐசிசி தொடரை இந்திய அணி வென்றது அந்நாட்டு ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. நடப்பு சாம்பியனாக களமிறங்கி பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது ஏன் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஷாகித் அப்ரிடி பேட்டி
இதனால் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஷடாப் கான் பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டனாக கொண்டு வரப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பைக்கு பின் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஷடாப் கான், திடீரென துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பேசும் போது, எதன் அடிப்படையில் ஷடாப் கான் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அப்படி என்ன சாதித்துவிட்டார் ஷடாப் கான்? எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எப்போது ஐசிசி தொடருக்கு தயாராகுவது பற்றியே பேசி வருகிறோம்.
எளிதாக தோல்வி
ஆனால் ஐசிசி தொடர் வரும் போது, எளிதாக தோற்கிறோம். அதன்பின் மீண்டும் அணியில் இருந்து சிலரை நீக்க வேண்டும் என்று பேச தொடங்கிவிடுகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் உள்ளது. அதற்கு மோசமான முடிவுகளே காரணம். எந்த முடிவிலும் ஒரு தொடர்ச்சி இருப்பதில்லை. ஆளுக்கு ஒரு முடிவு எடுத்து முற்றிலும் மாற்று திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
கேப்டன்கள், பயிற்சியாளர்கள், வீரர்களை தொடர்ந்து மாற்றி கொண்டே இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், கிரிக்கெட்டில் எப்படி முன்னேற்றம் காண்போம் என்று தெரிவித்துள்ளார்.

