சர்வதேச 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கடைசியாக 2017ல் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி பட்டத்தை வென்றது. அதன் பின்னர் 7 ஆண்டுகளாக நடக்காத சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு நடப்பு சாம்பியன்ஸான பாகிஸ்தான் மண்ணில் பிப்ரவரி மாதம் நடைபெறத் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா விகையாடுதில் பெரிய சிக்கல் உள்ளது. அதனைத் தீர்க்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய சில ஐடியாக்களை வழங்கியுள்ளது. இந்திய வாரியம் அதனைக் கருத்தில் கொள்ளுமாறும் வேண்டியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பார்டர் பிரச்சனைகளின் காரணமாக 2008 முதல் பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதைத் வன்மையாகத் தவிர்த்து வருகிறது. அந்த ஆண்டுடன் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடையும் வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி தொடர்ந்து சர்வதேச உலகக் கோப்பைத் தொடர்களுக்கு இந்தியா வந்து விளையாடுகிறது.
கடைசியாக 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சொந்த மண்ணில் நடத்திய பாகிஸ்தானுக்கு அதன் பிறகு மற்றொரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 18 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மூலம் ஓர் வாய்ப்பு அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்தினால் பல கோடிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும். கிரிக்கெட்டின் மிகப் பெரிய மார்கெட்டாக இருக்கும் இந்திய அணி இதில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் அந்த லாபத்தைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை.
இதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களது நாட்டுக்கு வந்து விகையாடுமாரு பிசிசிஐயை வேண்டிக் கேட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்து புதிய ஒரு ஐடியாவை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதாவது இந்திய அணியின் அனைத்துப் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான லாகூரில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தானில் தாங்காமல் விமானம் மூலம் டெல்லி/சண்டிகர் சென்றுவிட்டு மறுபடியும் அடுத்தப் போட்டிக்கு பாகிஸ்தான் வந்தால் போதும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசனை வழங்கியுள்ளது.
இதற்கு பிசிசிஐ விட இந்திய அரசாங்கம் தான் முதலில் சம்மதம் வழங்க வேண்டும். விரைவில் ஏதேனும் ஒரு முடிவு எடுக்கப்படும். ஒரு வேளை இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

