PAK vs SA.. 11 ரன் தேவை..1 விக்கெட்.. திரில் போட்டி.. 24 ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்கா சாதனை.! WC-ல் இருந்து வெளியேறியதா பாக்.?

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி செல்வதற்கு இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் களமிறங்கியது.

- Advertisement -

டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். எனினும் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான அப்துல்லா ஷபிக் எட்டு ரன்னிலும் இமாம் உல் ஹக் 12 ரன்னிலும் அவுட் ஆகி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தனர். எனினும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஆரம்ப சரிவிலிருந்து அணியை மீட்டனர்.

- Advertisement -

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வான் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது 21 ரன்களில் வெளியேற ஒரு முனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் பாபர் அசாம் 65 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்நிலையில் சவுத் ஷகீல் மற்றும் சதாப் கான் இருவரும் பாகிஸ்தான் அணியை மீட்டதோடு வேகமாகவும் ரன்களை சேர்த்தனர் .

- Advertisement -

ஆறாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்த்து 84 ரன்கள் சேர்த்த நிலையில் 36 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 43 ரன்கள் சேர்த்திருந்த சதாப்கான் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த சவுத் ஷகீல் 52 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் முஹம்மது நவாஸ் 24 ரன்களும் ஷாகின் அப்ரிதி இரண்டு ரன்னும் முகமது வாசிம் ஜூனியர் 7 ரன்னிலும் அவுட் ஆக பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் சம்ஸி 4 விக்கெட்டுகளும் யான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. இந்த உலகக் கோப்பையில் மூன்று சதங்கள் எடுத்த குவின்டன் டிகாக் 24 ரன்கள் எடுத்து ஆரம்பத்தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பவுமா 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து ரசி வாண்டர் டுசன் மற்றும் ஈடன் மார்க்ரம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் வான்டர் டுஷன் 21 ரன்னில் ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி வீரர் கிளாஸன்12 ரன்னில் அவுட் ஆக தென்னாப்பிரிக்கா சற்று தடுமாற்றத்தை சந்தித்தது .

- Advertisement -

எனினும் டேவிட் மில்லர் மற்றும் மார்க்ரம் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். அவருடன் ஆடிக்கொண்டிருந்த மில்லர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அப்ரிதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யான்சன் 20 ரன்னிலும் அவுட் ஆக தென்னாப்பிரிக்கா மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அந்த அணிக்கு எட்டாவது வீரராக களமிறங்கிய கோட்சி மார்க்ம் உடன் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மார்க்ரம் 93 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் உடன் 91 ரன்களில் ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து கோட்சி 10 ரன்னில் அவுட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்கா மீண்டும் தோல்வியை நோக்கி பயணிக்க தொடங்கியது. கேசவ் மகராஜ் மற்றும் இங்கிடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 10 ரன் சேர்த்தனர். இந்நிலையில் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் நான்கு ரன்கள் எடுத்திருந்த இங்கிடி ஆட்டம் இழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை உருவானது. எனினும் இறுதியாக விளையாடிய கேசவ் மகராஜ் மற்றும் சம்ஸி இருவரும் இணைந்து தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் உடன் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அணி மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 10 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி ஆகியவை பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தால் தான் அரை இறுதிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி போட்டி தொடர்களில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை வென்று இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles