பரபரப்பாக போய்க் கொண்டிருந்த இந்தியா – நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்டிலும் நியூசிலாந்து மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததோடு முதல் முறையாக இந்தியா மண்ணில் தொடரையும் கைபற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா & கான்வே மற்றும் பவுலிங்கில் ஹென்றி & ஒரூர்க்கே சிறப்பிக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்று முன்னிலைப் பெற்றது. இதனால் புனேவில் 2வது டெஸ்ட்டில் ஸ்பின் பிட்ச் போட்டு நியூசிலாந்து அணியை அடக்கி தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்தியாவின் கம்பீர் மற்றும் ரோஹித் & கோ திட்டம் தீட்டினர்.
ஆனால் அது இந்திய அணிக்கே பெரிய சிக்கலாக மாறிவிட்டது. இரு அணியின் ஸ்பின்னர்களும் நன்றாகவே செயல்பட்டனர். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களின் கவனமான ஆட்டம் தான் வெற்றிக்கு வித்தியாசம். இந்திய அணியின் சுழலைச் சமாளித்து முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ரன்கள் சேர்த்து. கான்வே 76, ரச்சின் 65 என இருவரின் அரை சதம் நியூசிலாந்து அணிக்கு பெரிய அங்கமாக விளங்கியது. இந்திய அணியைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார்.
பின்பு ஆடிய இந்தியா மிட்செல் சான்ட்னர் ஒருவரின் சுழலுக்கு மொத்தமாகப் படுத்துவிட்டது. வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 103 ரன்கள் பின்தங்கியது. நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்டனர் 7 விக்கெட்டுகளை அள்ளினார். ரோஹித், கோலி என இரு முன்னணி வீரர்களும் சுதப்பியது பெரிய ஏமாற்றம். பின்பு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் இந்திய ஸ்பின்னர்களை சுலபமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். கேப்டன் டாம் லேத்தம் நிலைத்து நின்று ஆடி 86 ரன்கள் அடித்து அணிக்கு 300+ முன்னிலைக்கு அணியை எடுத்துச் சென்றார்.
மூன்றாம் நாளான இன்று பிலண்டல் 41, பிலிப்ஸ் 48* எடுக்க 255 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. 359 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி மீண்டும் ஏமாற்றத்தையே அளித்தது. நம்பிக்கையாக ஆடிய ஜெய்ஸ்வால் 77, ஜடேஜா 42 தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. மற்றுமொரு முறை சுழலில் சான்ட்னர் 6 விக்கெட்டுகளை எடுத்து ஆதிக்கம் செலுத்த 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. 2012 முதல் 2024 வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று வந்த இந்திய அணியின் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணிக்கு இது மிகப் பெரிய அவமானமாக தெரியும். மறுபக்கம், பெரிதாக அனுபவம் இல்லாததால் இளம் வீரர்களை வைத்து இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை லேத்தம் தலைமையிலான நியூசிலாந்து வென்றது வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

