டி20 கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் மனப்பான்மை கொண்ட பந்துவீச்சாளர்களின் முக்கியத்துவம் குறித்தும் நடப்பு கிரிக்கெட் உலகில் அதைப் பெற்ற பவுலர்கள் 2 பேர் மட்டுமே என தென்னாப்பிரிக்காவின் லெஜெண்ட் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற டி20 வடிவக் கிரிக்கெட் மேலும் அதிரடியான நிலையை எட்டியுள்ளது. முன்னர் 160 – 180 வரை அடித்துக் கொண்டிருந்த அணிகள் தற்போது 220 – 250 ரன்களைச் சுலபமாக அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் தங்கள் அதிரடியான அணுகுமுறையால் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனாலும், சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆட்டத்தின் போக்கை தனியாக மாற்றக்கூடிய திறன் பெற்றுள்ளனர் என ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ககிசோ ரபாடா இருவரைக் குறிப்பிட்டு டேல் ஸ்டெய்ன் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். அவர் இருந்தால் இந்திய அணி மற்றும் அவரது ரசிகர்கள் அழுத்தம் இல்லாமல் பெரிய மூச்சு விடுவார்கள். அதன் காரணம், ஜஸ்பிரித் பும்ரா அனைத்தையும் பார்த்துக் கொள்வார். 2024 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியை மீட்டெடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்தார். இத்தகு உயர்ந்த நிலையில் இருக்கும் பவுலருக்கு இணையாக நடப்பு கிரிக்கெட்டில் இருக்கும் ஒரே பந்துவீச்சாளராக ரபாடாவை, பும்ராவுடன் ஒரே பிரிவில் சேர்க்கிறார் ஸ்டெய்ன்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ” டி20 கிரிக்கெட் இப்போது மிகவும் மாறி, பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை அணுகும் விதம் முற்றிலும் புதிய பாணியில் உள்ளது. நான் பயிற்சியளிக்கும் டி20 லீக்களில், விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட பந்துவீச்சாளர்களைத் தேடுகிறேன். பும்ராவும் ரபாடாவும் மட்டுமே தற்போது, ஆட்டத்தின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து விக்கெட்டை வீழ்த்தக் கூடியவர்களாக திகழ்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ” என்றார்.
மேலும், ” 155 கி.மீ வேகத்தில் பந்து வீசுவது பெரிய திறமைக் கிடையாது. ஒரே பிளானுடன் இல்லாமல் ஆட்டத்தின் போக்கில் அதற்கேற்றவாறு திறன்களை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்துவதே சாமர்த்தியம். இது போன்ற பந்துவீச்சாளர்கள் தங்கத்திற்கு சமம். இவர்களைப் போன்ற வீரர்களின்அதிகமாக உருவாக்கினால் வேகப்பந்து வீச்சின் தரம் இன்னும் உயரும்,” என்றும் ஸ்டெயின் கூறினார்.

