இந்தியா – வங்கதேச அணிக்கு இடையேயான டி20ஐ தொடரின் இரண்டாவது போட்டியை அபாரமாக வென்றதோடு சீரிஸையும் கைப்பற்றியது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி துவக்க வீரர்கள் சாம்சன் 10, அபிஷேக் ஷர்மா 15 என வெளியேற அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ்வும் 8 ரன்னில் ஏமாற்றம் அளிக்க 41/3 என இந்தியா தடுமாறியது. பின்னர் இளம் நட்சத்திரங்கள் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் கைகோர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ரூபல் ஹுசைன் ஓவரில் 6,2,4,6,6 என மொத்தம் 26 ரன்கள் என அடித்து நொறுக்கினார் நிதிஷ் ரெட்டி. 217 ஸ்ட்ரைக் ரேட்டில் 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்துவிட்டு பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் ரின்கு சிங் 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். அடுத்து பினிஷிங்கில் பராக் 2 சிக்சர்கள், பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸ் என பந்துகளைப் பறக்க விட இந்தியா 20 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்தது. சர்வதேச டி20ஐயில் 36வது முறையாக 200+ ஸ்கோரை பதிவு செய்து சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி.
அடுத்து ஆட வந்த வங்கதேச அணி, என செய்வதென்று தெரியாமல் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு அடங்கிவிட்டனர். மகமதுள்ளா மட்டுமே கடைசி வரை துணை இல்லாமல் போராடி 41 ரன்கள் அடித்தார். மற்ற எந்த ஒரு வீரரும் 16 ரன்களைத் தாண்டவில்லை. 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்தது.
பனி காரணமாக இந்தப் போட்டியில் இரண்டாவதாக பந்துவீசுவது கடினம். ஆனாலும் அந்தச் சவாலை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இப்போட்டியில் சவாலாக வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார் கேப்டன் சூரியகுமார் யாதவ். அதன் படி இந்திய இளம் வீரர்கள் கூட பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷாதீப் சிங் & மயாங் யாதவ் தலா ஒரு விக்கெட், நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகள் எடுக்க மீதம் 5 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் மற்றும் அள்ளினர். பார்ட் டைம் ஸ்பின்னர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் பராக் ஆளுக்கு 1 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 1, வருண் 2 எடுத்தனர். ஒரே போட்டியில் 7 இந்திய வீரர்கள் விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறை.
பேட்டிங்கில் அதிரடி காட்டிய நிதிஷ் ரெட்டி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒரே போட்டியில் 70 ரன்கள் + 2 விக்கெட் எடுத்த ஒரே ஆல்ரவுண்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா வகையில் இந்திய அணிக்கு கிடைத்துள்ள தரமான வீரர் இவர். நிச்சயம் அணியில் தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.

