இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றியோ அல்லது டிராவையோ செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டி காயம்
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளது. மைதானத்தில் ஃபீல்டிங்கின் போது அர்ஷ்தீப் சிங் காயம் அடைய, ஆகாஷ் தீப்பும் பவுலிங் செய்யும் போது காயம் அடைந்தார். இந்த நிலையில் 3வது வீரராக நட்சத்திர ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியும் காயம் அடைந்திருக்கிறார். ஜிம்மில் பயிற்சியின் போது நிதீஷ் குமார் ரெட்டியும் காயம் அடைந்திருக்கிறார்.
இதனால் நிதீஷ் குமார் ரெட்டி விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிய வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் விளையாடியதால், நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 2வது போட்டியில் களமிறக்கப்பட்ட நிதீஷ் குமார் ரெட்டி பெரிதாக சோபிக்கவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 2 இன்னிங்சிலும் 43 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு
இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி விளையாடுவார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது காயம் அடைந்திருப்பதால், ஷர்துல் தாக்கூர் மீண்டும் வாய்ப்பை பெறுவாரா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதனால் நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அடுத்தடுத்து 3 வீரர்கள் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் 3 மற்றும் 4 ஆகிய டெஸ்ட் போட்டிக்கு இடையில் 8 நாட்கள் இடைவெளி இருப்பதால், பும்ராவை இந்திய அணி நிர்வாகம் விளையாட வைக்கும் என்று நம்பப்படுகிறது.

