இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2 முதல் ஜூலை 6 வரை நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நாளை முதல் பயிற்சியை தொடங்க உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணங்களை அடுத்த போட்டியில் சரி செய்ய வேண்டும் என்று வீரர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.
அஸ்வின் கணிப்பு
இதனிடையே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வினும் கலந்து கொண்டுள்ளார். அதில் அஸ்வின் பேசும் போது, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவை எப்படி சமாளிப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
குல்தீப் யாதவால் 100 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தாலும், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 350 ரன்களுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி நடந்துவிட்டால், இந்திய அணியால் எளிதாக 125 ரன்கள் முன்னிலை பெறலாம். இந்திய அணியில் நிச்சயமாக குல்தீப் யாதவிற்கான இடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.
ஜெய்ஸ்வால் ஃபீல்டிங்
அவர் மட்டும் லீட்ஸ் மைதானத்தில் விளையாடி இருந்தால், நிச்சயம் ஆட்டம் வேறு மாதிரி அமைந்திருக்கும். அதேபோல் ஃபீல்டிங்கை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் ஸ்லிப் திசையில் மிகச்சிறந்த ஃபீல்டர். அவர் நன்றாக முன்னேறி வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் டியூக் பந்து கொஞ்சம் பெரிதாகவும், கனமானதாகவும் இருக்கும். அதனால் அதனை உணர்ந்து ஃபீல்டிங் செய்ய வேண்டும்.
அதேபோல் இங்கிலாந்து ரசிகர்கள் எவ்வளவு ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்பதையும் அறிவோம். அதனால் ஜெய்ஸ்வாலை நினைத்து கவலையாக உள்ளது. இந்திய அணி ஸ்பின்னர்கள் அடுத்தடுத்த போட்டியில் ஒரு ரஃப் பேட்ச்களை பிட்சில் உருவாக்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து கடைசி இன்னிங்சில் பவுலிங் செய்திருந்தால், அதனை நிச்சயம் செய்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

