இன்று டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது நாளில் மும்பை மைதானத்தில் இங்கிலாந்து நேபாள் அணிகள் மோதிய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் இறுதி ஓவரின் இறுதி பந்து வரையில் போராடிய கத்துக் குட்டி நேபாள் இங்கிலாந்துக்கு பயத்தை காட்டி அலற விட்டது. இரு அணிகளும் முதல் முறையாக மோதிய நிலையில் இங்கிலாந்துக்கு இது மறக்கவே முடியாத போட்டியாக மாறி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். கடைசியில் அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் 18 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய சிறிய அணியான நேபாள் அணிக்கு மிடில் ஆர்டர்கள் ரோகித் பர்டேல் 34 பந்தில் 39 ரன்கள், திபேந்திர சிங் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து போட்டியை விட்டு விடாமல் பிடித்து வைத்தார்கள். இதைத் தொடர்ந்து கடைசி ஐந்து ஓவர்களுக்கு வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆறாவதாக உள்ளே வந்த லோகேஷ் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 21 ரன்கள் விளாசினார். 19ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரை சாம் கரன் வீசினார். இந்த ஓவரில் நேபாள் அணியால் போராடி 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறப்பாக விளையாடிய லோகேஷ் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இறுதியாக இங்கிலாந்து ஒரு வழியாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தப்பித்தது. போராடி தோற்ற நேபாள் அணிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

