2024க்கான ஐபிஎல் தொடர் ஆனது அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான மினி ஏலம் துபாயில் நேற்று நடந்து முடிந்திருக்கிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்கின்றனர். ஆனால் இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. முதலில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது பொய்யாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் கருதினர்.
ஆனால் மும்பை அணி திடீரென்று குஜராத் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வர்த்தகம் செய்து பிறகு கேப்டனாகவும் அறிவித்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்தனர். இதன் எதிரொளியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பாலோவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகக் கொண்டு வரக் காரணம், அவர் ஐபிஎல்லில் முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே களம் இறங்கினார். பின்னர் 2022ல் குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்தது. தனது கேப்டன்சி தலைமையில் குஜராத் அணியை 2022ல் சாம்பியன் பட்டத்தைப் பெற வைத்தார்.
மேலும் 2023ல் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார். இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவினார். மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மும்பை அணி பல வெற்றிகளைக் குவிக்கவும் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
எனவே இனி ரோகித் சர்மா பேட்டிங்கில் மட்டுமே களமிறங்குவது மும்பை அணியின் விசுவாசமான ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும் ரோஹித் சர்மா மும்பை அணியிலிருந்து விலகி வேறு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கலாம் என்று ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தின் இடைவெளியின் போது ரசிகர் ஒருவர் “ரோஹித் சர்மாவை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்று உற்சாகமாக கத்தினார்.
இதனைக் கேட்ட மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ” நீங்கள் பதட்டம் கொள்ள வேண்டாம். அவர் நிச்சயமாக அணிக்கு பேட்டிங் பங்களிப்பை வழங்குவார்” என்று உறுதியளித்தார். எனவே வரவிருக்கும் சீசனில் ரோஹித் சர்மாவின் செயல்பாட்டைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இனி மும்பை அணிக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

