அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடக்கவுள்ளது. இந்த ஏலத்திற்கான இறுதிப்பட்டியலில் 333 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், அவர்களில் இருந்து 77 வீரர்களை வாங்க 10 அணிகள் மும்முரமாக உள்ளனர். இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.
ஏனென்றால் டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட், இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித் என்று ஏராளமான வீரர்கள் மினி ஏலத்திற்கு பெயர்காளை பதிவு செய்துள்ளனர். அதிலும் மிட்சல் ஸ்டார்க் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் விளையாடுவதற்காக கம்பேக் கொடுத்துள்ளார்.
கடைசியாக ஆர்சிபி அணிக்காக ஆடிய மிட்சல் ஸ்டார்க், அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியம் என்று ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்த்து வந்தார். தற்போது கூட அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாகவே ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
மிட்சல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்த பின்னர், நேரடியாக அவரை அணுகி முழு சீசனிலும் விளையாடுவீர்களா என்று பல்வேறு அணி நிர்வாகங்கள் ஆலோசித்தன. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி வீரர்களில் ஹேசல்வுட் தவிர்த்து அனைத்து வீரர்களும் முழு சீசனிலும் விளையாடுவதாக தெரிய வந்தது.
அதேபோல் ஐபிஎல் அணிகளில் பெரும்பாலான அணிகளுக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை இருந்து கொண்டே உள்ளது. இதனால் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகிய இருவருக்கும் அதிக தொகை கொடுக்க அணி நிர்வாகங்கள் ஏலத்திற்கு வருவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசும் போது, சொந்த மைதானத்தில் அதிக போட்டிகளை ஒவ்வொரு அணிகளும் ஆடவுள்ளன. எந்த அணியின் ஆடுகளம் அதிக பிளாட்டாக உள்ளதோ அவர்கள் நிச்சயம் மிட்சல் ஸ்டார்க்கை வாங்க முயற்சிப்பார்கள். அப்படி பார்த்தோமென்றால் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் ஸ்டார்க்கை வாங்க முயற்சிக்கும்.
காற்றிலேயே ஸ்விங், யார்க்கர் மேஜிக், பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட், டெத் ஓவரில் சிறப்பான யார்க்கர்ஸ் என்று அனைத்தும் வைத்திருக்கும் நல்ல கலவையாக மிட்சல் ஸ்டார்க் இருக்கிறார். அதனால் அவர் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

