2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இதன்பின் 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடந்து வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்களிலேயே பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன்பின் நேற்று முன் தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பாகிச்தான் அணி அடைந்திருக்கிறது.
அதேபோல் வங்கதேச அணியை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வீழ்த்திவிட்டன. இதனால் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சொந்த மண்ணில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஸ்வானுக்கு எதிர்ப்பு
இதற்கு பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமை போதாமையே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் முகமது ரிஸ்வான் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளன. முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் கூறும் போது, கேப்டன் பதவியை முகமது ரிஸ்வான் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. ரிஸ்வானால் தனது கருத்தை கூட சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால், அவர் எப்படி கேப்டனாக முன்னேற்றம் அடைய முடியும்? அவரின் கேப்டன்சியை களத்திலும் பார்த்துவிட்டோம். என்னை பொறுத்தவரை கேப்டனாக ரிஸ்வான் ஒரு மோசமான தேர்வு.
2 ஆண்டுகளில் 3 கேப்டன்
பாபர் அசாமையும் இப்படிதான் சொல்வேன். தொடர்ந்து தோல்விகள் வரும் போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடும் வரை அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்க கூடாது. கார்ப்பரேட் செட் அப் போல் மாற்றங்கள் வர வேண்டும். கொடுத்த பணியை செய்யவில்லை என்றால், கிளம்புவதே சரி என்று கூறினார்.
2023 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் பாபர் அசாம் கேப்டன்சியை ராஜினாமா செய்தார். பின் ஷாகின் அப்ரிடி கேப்டனாக கொண்டு வரப்பட்டார். இருந்தாலும் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமிடமே கேப்டன்சி அளிக்கப்பட்டது. அதிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதால், ரிஸ்வான் கேப்டனாக கொண்டு வரப்பட்டார். தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது.

