இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி டெஸ்ட் தொடர் கடைசி நாளினை எட்டி இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளிலும் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராட உள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகளும் தேவையாக இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ் அபாரமாக பவுலிங் செய்து அசத்தி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் முகமது சிராஜ்க்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிராஜுக்கு குவியும் பாராட்டு
அந்த பாராட்டுக்கள் 20 விக்கெட்டுகளுக்காக மட்டும் கிடையாது. இந்த டெஸ்ட் தொடரின் அத்தனை போட்டிகளிலும் ஆடிய ஒரே வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மட்டும்தான். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதாக கணக்கு காட்டப்பட்டாலும், அவரும் முதல் இன்னிங்சின் போதே காயம் அடைந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் 5வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்திலும் கூட முகமது சிராஜ் வேகமாக ஓடி வந்து 137 கிமீ வேகத்தில் பவுலிங் செய்வது பலரையும் வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் முகமது சிராஜை ரசிகர்கள் பலரும் உழைக்கும் குதிரை என்று கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியின் முன்னணி பவுலரான பும்ரா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
1088 பந்துகள்
இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் 4 போட்டியிலும், பிரைடன் கார்ஸ் 4 போட்டியிலும் ஆடி இருக்கின்றனர். மற்ற எந்த வேகப்பந்துவீச்சாளரும் முகமது சிராஜ் அருகில் கூட வரவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் மொத்தமாக 1088 பந்துகளை வீசி, அதிக பந்துகளை வீசிய பவுலர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
இந்தப் போட்டியில் மட்டும் இந்திய அணி வென்றால், அதற்கு முதன்மையான காரணமாக முகமது சிராஜ் இருப்பார். பும்ரா இல்லாத போட்டியில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஒரு சீனியர் வீரராக சிராஜ் ஆடி வருவது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ரசிகர்களை குதூகலப்படுத்தும் ஒரு வீரராகவும் சிராஜ் மாறி வருவது பாராட்டை பெற்றுள்ளது.

