இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாட வேண்டும் என்றும் ஒரு முறை வெளியேறிவிட்டால் இனி மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது சிரமம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக பல காயங்களுக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் களத்தில் இறங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷமி. 7 போட்டிகளில் களம் கண்டு 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவற்றில் மூன்று 5-விக்கெட் மற்றும் ஒரு 4-விக்கெட் என அசத்தினார்.
உலககோப்பை தொடருக்கு பின்பு காயம் காரணமாக விலகி இருந்த இவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.
களத்தில் மீண்டும் ஷமி.
காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷமி சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் தனது உடற்தகுதியை நிரூபித்ததன் மூலமாக நடப்பர்விருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தேர்வாகியுள்ளார் ஷமி.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற பசி தீர்ந்துவிடக்கூடாது என்பதை தான் நான் முதலில் உணர்கிறேன். உங்களுக்கு அந்த பசி இருந்தால், நீங்கள் 10 முறை காயம் அடைந்தாலும், நீங்கள் எப்போதும் மீண்டு வந்து சண்டையிடுவீர்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது “எத்தனை மேட்ச் ஆடினாலும் ஏதோ குறைவது போலவே தோன்றுகிறது. ஏனென்றால், நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினால், எனக்கு இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது” என்றார் ஷமி.
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஷமி
விஜய் ஹசாரே டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஷமி மூன்று போட்டிகளில் விளையாடினார் இவற்றில் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக தலா ஒரு விக்கெட்டையும், ஹரியானாவுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 3-61 என்ற கணக்கில் விக்கெட் வீழ்த்தினார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் 9 போட்டிகளில் விளையாடிய ஷமி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சராசரியாக 25.36 மற்றும் 7.85 என்ற எகானமி விகிதத்தில் கைப்பற்றினார் ஷமி. இவற்றில் இவரது சிறந்த பந்துவீச்சு 3-21 ஆகும்.

