2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை எந்த அணியால் வீழ்த்த முடியும் என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருவரும் தங்களது கணிப்பை தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இந்திய அணி இரண்டாவது சுற்றில் இடம் பெற்று இருக்கும் குழுவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது முதல் போட்டியில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுமே தற்போது மிகவும் பலமாக உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த போட்டி உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது ” என்னை பொருத்தவரையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு பெரிய டோட்டலை வைத்தாலும் தென் ஆப்பிரிக்கா அதை துரத்தக்கூடிய பேட்டிங் பவரை வைத்திருக்கிறது. அவர்களால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆதில் ரஷீத் “நான் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பேட்டிங் வரிசை மிகவும் நீளமாக உள்ளது. இதன் காரணமாக அவர்களால் இந்திய அணியை இரண்டாவது பேட்டிங் செய்து வெல்ல முடியும். மேலும் இதை தென் ஆப்பிரிக்கா அணியாலும் செய்ய முடியும். இது மிகவும் சவாலான குழுவாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

