இந்திய அணிக்கு கடந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்த சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய பேட்டிங் யூனிட் விளையாடிய விதத்தில் சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும். சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாத சோகம் இந்திய அணிக்கு நடந்திருக்கும்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” என்னுடைய ரேடாரில் இந்த தொடரில் முழுவதுமாக சஞ்சு சாம்சன் இல்லாமல் போய்விட்டார். இந்த தொடரில் மிகவும் அண்டர்ரேட் பிளேயர் என்றால் அது இவர்தான். அழுத்தமான நேரத்தில் எப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸ் அவர் விளையாடுகிறார். நிச்சயமாக அழுத்தமான தருணத்தில் இந்த கிரிக்கெட் வடிவத்தில் அவரால் மிகத் திறமையாக விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன்”
“அவருக்கு வாய்ப்பு கிடைக்காத பொழுது இத்தோடு தன்னுடைய கதை முடிந்து விட்டது என்று அவர் நினைத்திருப்பார். ஆனால் அவர் விளையாடிய விதத்திற்கு அவர் பெருமைப்பட வேண்டும். நிச்சயமாக அவர் ரன் எடுக்காவிட்டால் இந்திய அணி தோற்று வெளியேறியிருப்பது உண்மை” என்று கூறியிருக்கிறார்.

