நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி பரபரப்பான செமி பைனல் போட்டியில் இங்கிலாந்து அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. மேலும் நாளை மறுநாள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த செமி பைனல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா கடைசியில் வீசிய இரண்டு ஓவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையே வித்தியாசமாக பும்ரா இருந்தார். இந்த நிலையில் அவர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும்பொழுது “பும்ரா வசம் பல வேரியேஷன் இருக்கிறது. ஆனாலும் அவற்றை அழுத்தமான நேரத்தில் எப்படி எங்கு பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு முழுமையாக தெரிந்து இருக்கிறது. இதுதான் உலகில் அவரை தலைசிறந்தவராக மாற்றுகிறது. இறுதிப் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”
“ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன் உலகின் எல்லா சூழ்நிலைகளிலும் ரன்கள் எடுப்பது போல பும்ரா பந்துவீச்சில் எல்லா சூழ்நிலைகளிலும் விக்கெட் கைப்பற்றி சிறப்பாக செயல்படுகிறார். நான் கேப்டனாக இருந்தால் அவரை எந்த இடத்தில் பயன்படுத்துவது என்பதுதான் பெரிய சவாலாக எனக்கு இருந்திருக்கும். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட பொழுதும் இவர் குறித்து யாரும் அதிகம் பேசவில்லை. ஏனென்றால் அவர் சாதாரணமாகவே இப்படித்தான் சிறப்பாக செயல்படுவார் என்பதால் யாரும் பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

