நாளை மறுநாள் டி-20 உலகக் கோப்பை தொடரில் செமி பைனலில் இந்திய அணியை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் இங்கிலாந்து அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை செமி பைனலில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்தது. அதற்கு முந்தைய டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை செமி பைனலில் வென்றிருந்தது. மீண்டும் மூன்றாவது முறையாக இரண்டு அணிகளும் செமி பைனலில் சந்திப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இது குறித்து மைக்கேல் ஆதர்டன் பேசும் பொழுது “நான் இதுவரை பார்த்ததில் இந்திய அணி வெல்ல முடியாத அணி கிடையாது. இந்தியாவின் பேட்டிங் யூனிட் பலமானதாக இருக்கிறது. ஆனால் அது இதுவரையில் பெரிய அளவில் அச்சுறுத்தும் வகையில் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக அவர்கள் வெல்ல முடியாத அணி இல்லை என்பது புரிந்து கொள்ள முடிகிறது”
“அதே சமயத்தில் அவர்களுடைய பவுலிங் யூனிட் வலிமையானதுதான். ஆனால் அதில் யாரோ ஒருவர் சரியாக பந்து வீசாத பொழுது அவருடைய இடத்திற்கு கொண்டுவர இன்னொரு பவுலர் அவர்களிடம் இல்லை. எனவே இங்கிலாந்து குறிப்பிட்ட இரண்டு இந்திய பவுலர்களை குறிவைத்து அடித்தால் அவர்கள் சிக்கிக் கொள்வார்கள். மேலும் இங்கிலாந்து தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்திய அணியை வென்று விடலாம்” என்று கூறியிருக்கிறார்.

