அண்மையில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட்டில் இந்திய அணி என்னதான் தொடரை இழந்து இருந்தாலும் இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தரமான சுழற் பந்துவீச்சை வெளிக்காட்டி தன் கம்பேக்கை அறிவித்தார். அதற்கான பாராட்டுகள் குவிந்தன. இருப்பினும் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, இந்த பெர்பாமன்ஸ் மூலம் இந்திய அணியில் விரிசல் மற்றும் சிக்கல் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் அள்ளி இந்திய அணி பந்துவீச்சின் அங்கமாக திகழ்ந்தார். தமிழக லெஜன்ட் வீரர் அஷ்வின் இடத்தை நிரப்ப, தமிழகத்தில் இருந்தே மற்றொரு ஆஃப் ஸ்பின்னர் வந்துள்ளார் என சுந்தரை சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளினர்.
ஆனால் மனோஜ் திவாரி மொத்தமாக மாறாக பேசியுள்ளார். அவர் கூறுதாவது, ” இரண்டாவது டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசியது சிறப்பானது தான். ஆனால் அதற்காக குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்க முடியாதவர் இல்லை என்று ஆகிவிடாது. கூடுதல் பேட்டிங்கை மனதில் வைத்து தான் இந்திய அணி குல்தீப் யாதவ் பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது. “
” ஆனால் வாஷிங்டன் சுந்தர் அணியில் இப்போது நுழைந்துள்ளதால் வரும் காலத்தில் பல்வேறு குழப்பங்கள் நிகழும், விரிசல்கள் ஏற்படும். ஏற்கனவே அணியில் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் இருக்கிறார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஜொலித்த அவரை விட்டுவிட்டு சுந்தரை தேர்வு செய்து விட்டனர். “
மேலும், ” அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் என இரண்டு முன்னணி வீரர்களும் பெஞ்சில் அமர்த்தி சுந்தரை இந்திய அணி விளையாடியுள்ளது. அதே போல ஆகாஷ் தீப்பை முதல் டெஸ்ட்டில் சேர்க்கவில்லை, பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் பும்ராவுக்கு மட்டும் புதிய பந்தைக் கொடுத்து விட்டு இவரை ஒதுக்கிவிட்னர். இந்த மாற்றங்களினால் எந்த ஒரு பயனும் இல்லாமல் இந்திய அணி பின்னடைவைத் தான் சந்தித்துள்ளது. இனி அணியைத் தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு சிக்கல் தான். ” என்றார் மனோஜ் திவாரி.

