நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை ஏற்றி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வெற்றி என்பது மிகவும் அவசியமானது. மூன்று வெளிநாட்டு வீரர்கள் துவக்க இடத்தில் வரவேண்டும் என்று நாங்கள் யோசித்து இருந்தோம். மேலும் ஆகாஷ் சிங் எங்கள் அணியில் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். அவர் தனது வாய்ப்புக்காக காத்திருந்து நிரூபித்து இருக்கிறார்”
“இந்த ஐபிஎல் தொடரில் எங்களுடைய அதிகப்படியான சிந்தனைதான் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது. மற்றபடி உண்மையில் இது மிகவும் அருமையான ஒரு அணி. எங்களின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது மிகவும் சிறப்பான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.

