நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிகம் தேடப்படும் வீரராக சஞ்சு சாம்சன் மாறி இருக்கிறார். இந்த நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாட்டு முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி சஞ்சு சாம்சன் சரிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய தேர்வுக்குழு சுப்மன் கில்லை இந்திய டி20 அணிக்கு கொண்டு வந்ததும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை ஆஸ்திரேலிய டி20 தொடரில் மிடில் ஆர்டர் அனுப்பினார்கள். அந்தப் புள்ளியில் இருந்து தான் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்ம் சரிய ஆரம்பித்தது. பிறகு அவர் இந்திய பிளேயிங் லெவனில் இல்லாமலேயே போய்விட்டார்.
இதுகுறித்து லட்சுமிபதி பாலாஜி பேசும்பொழுது “ஆஸ்திரேலிய டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார். அது அவருக்கு சரியானதாக இல்லை. அங்கிருந்துதான் அவருடைய பேட்டிங் சரிய ஆரம்பித்தது. அவர் தவறு செய்யவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த தவறுக்கு காரணம் அவரை கீழ் வரிசையில் விளையாட வைத்த இந்திய அணி நிர்வாகம்தான்”
“அவரை ஐபிஎல் தொடரிலும் இந்திய t20 அணியிலும் நாம் மேல் வரிசையில் பார்த்த பொழுது தான் சதங்கள் அடித்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது அவருடைய சரியான இடம் டாப் ஆர்டர்தான். எனவே எந்த காரணத்திற்காகவும் அவரை நாம் கீழ் வரிசையில் விளையாட வைக்க கூடாது” என்று கூறியிருக்கிறார்.

