சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த ஏப்ரல் 11 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தனது மிகக் குறைந்த மொத்த ரன்களைப் பதிவு செய்து படுதோல்வி அடைந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு இது தொடர் 3வது தோல்வி என்பதால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். ஏற்கனவே சிக்கலாகத் தெரிந்த பேட்டிங், ருத்துராஜ் கெய்க்வாட் காயத்தால் வெளியேறியதால் மேலும் தெம்பில்லாமல் தெரிகிறது.
சிஎஸ்கேயின் அணியின் பேட்டிங் வரிசை மோசமாகச் சரிந்து, 100 ரன்களைத் தாண்டுவதற்கே போராடியது. இந்தத் தோல்வியால், 5இல் 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோனி கடந்த போட்டியில் கேப்டனாக வந்தால், எதாவது மேஜிக் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது, இது மிகவும் மோசமான தோல்வியாக அமைந்துள்ளது பெரிய பின்னடைவு.
இந்நிலையில் தீவிர சென்னை அணியின் ரசிகரான முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், சிஎஸ்கேயின் முதல் வரிசை வீரர்களின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். ரச்சின் ரவீந்திராவும், டெவோன் கான்வேயும் தடுமாறி தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் ஐந்து ஓவர்களில் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. “ சென்னை சூப்பர் கிங்ஸின் மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. பவர்ப்ளே பேட்டிங்கைப் பார்க்கையில் டெஸ்ட் போட்டிக்கு ஒத்திகை பார்ப்பது போல இருந்தது. கொஞ்சம் வேறொரு நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும். பிரித்வி ஷாவை ஏன் மாற்று வீரராக தேர்வு செய்யக் கூடாது ? ” என்றார்.
அவர், பவர்பிளேயில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய, ஏலத்தில் விடுபட்ட பிரித்வி ஷாவை முயற்சிக்கலாம் என பரிந்துரைத்துள்ளார். 2021 பிறகு பிரித்வி ஷா பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் ஆற்றல் கொண்ட வீராக ஶ்ரீகாந்த் பார்க்கிறார். இதற்கிடையில், சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களான வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். மற்றொரு பக்கம், 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரே, சிஎஸ்கேவின் பயிற்சியில் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் அவர் 65-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். சிஎஸ்கே அணி இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, புதிய உத்திகளுடன் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

