தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. சென்சுரியனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.
பின்னர் வந்த விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தை இந்திய அணி 100 ரன்களை கடந்தாலும், அவரும் 38 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். இதன்பின் வந்த கேஎல் ராகுல் ஆட்டத்தை கட்டுப்பாட்டை வைத்து கொண்டார். தென்னாப்பிரிக்கா அணியின் எந்த பவுலராகும் கேஎல் ராகுலின் உறுதித்தன்மையை உடைக்க முடியவில்லை.
டெய்லர்ண்டர்களுடன் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல், கம்பேக் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 208 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து களத்தில் உள்ளது. இதில் கேஎல் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். டெய்லண்டர்களிடம் பேட்டிங்கை கொடுக்காமல், அதிக பந்துகளை கேஎல் ராகுலே ஸ்ட்ரைக்கில் வைத்து கொள்கிறார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசும் போது, இந்த போட்டியில் கேஎல் ராகுல் சேர்த்துள்ள அரைசதம், கிட்டத்தட்ட சதம் அடித்ததற்கு இணையான ஒன்றாகும். 2ஆம் நாள் ஆட்டத்தில் அவரால் சதம் அடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது அவருடன் களத்தில் உள்ள டெய்லண்டர்களின் பேட்டிங்கையும் பொறுத்தது. ஆனால் கேஎல் ராகுல் சதம் விளாசியதற்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார்.
என்னை பொறுத்தவரை இதனை கேஎல் ராகுலின் சதமாகவே கருதுவேன். இந்த இன்னிங்ஸில் கேஎல் ராகுலின் கட்டுக்கோப்பு எந்த இடத்திலும் தவறவில்லை. ஒரு இடத்தில் கூட அவரின் தலை வேறு இடத்திற்கு மாறவில்லை. பவுன்சர் பந்துகளுக்கு ஏற்ப அவரால் பந்தை விடவும், தடுக்கவும் கேஎல் ராகுலால் முடிகிறது.
தனது உயரத்தை கொண்டு பவுன்சர் பந்துகளை சமாளிக்கிறார். அதற்கு அவரின் பேலன்ஸ் முக்கிய காரணம். தேவைக்கேற்ப கால்களை நகர்த்தி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கேஎல் ராகுல். அவருக்கு இவ்வளவு திறமை இருப்பதை அனைவரும் பல ஆண்டுகளாக அறிவோம். ஆனால் அவர் காயமடைவதற்கு முன்பாக அவரின் திறமையை வெளிப்படுத்தவில்லை.
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து 6 மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு வந்த பின் தான், கேஎல் ராகுல் வித்தியாசமான இருக்கிறார். இப்படியான கேஎல் ராகுலை பார்க்க தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். சிறந்த இன்னிங்ஸை ஆடியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல் தனது கம்பேக் போட்டியில் சதம் விளாசிய நிலையில், டெஸ்ட் கம்பேக் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

