வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் பும்ரா விலக, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பயிற்சித் தொடர் போல் அமைந்த இங்கிலாந்து தொடரில் இந்தியா 3-0 என சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ளது. இந்தத் தொடர் முடிந்த பின்னர் கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் பேட்டிங் வரிசைப் பற்றியும் வருகிற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தன் வலுவான இந்திய அனியைக் கூறினார்.
” விராட் கோலி கடைசிப் போட்டியில் ஒரு வழியாக ரன்கள் அடிக்கத் துவங்கியது இந்திய அணிக்கு நனல்லது. அதே போலத் தான் ரோஹித் சர்மாவும். இது தவிர கில், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். ஆனால் கே.எல்.ராகுல் விஷயத்தில் கம்பீர் தவறு செய்கிறார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 17 ஓவர்கள் மீதம் இருக்கும் போது ராகுல் உள்ளே வந்து நன்றாக ஆடினார். கடைசி 3 ஓவர்களில் அவரை அனுப்பி 30 ரன்கள் அடிக்கச் சொல்ல, அதைச் செய்யக் கூடிய வீரர் அவர் அல்ல. அதனால் அவருக்கான சரியான இடம் நம்பர் 5 மட்டுமே. ” என்றார் பீட்டர்சன்.
இங்கிலாந்து ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வலது கை – இடது கை காம்பினேஷன் காரணமாக கே.எல்.ராகுலுக்கு முன்பு அக்ஷர் படேலை மேலே ஆடச் சொல்லியுள்ளார் கம்பீர். அந்த இரண்டுப் போட்டியைச் சேர்த்து கே.எல்.ராகுல் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஆனால் கடைசிப் போட்டியில் தன் நம்பர் 5இல் களமிறங்கிய அவர் 29 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி கெவின் பீட்டர்சன், ” வருண் சக்ரவர்த்தி நல்ல ஸ்பின்னர் தான், ஆனால் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் அனுபவத்தின் அடிப்படையில் என் பிளேயிங் லெவனில் இடம் பெறுகிறார். ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதால் அரஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்கிறேன். ஷமி, அரஷ்தீப் சிங், பாண்டியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள். ஸ்பின்னர்களுக்கு ஜடேஜா முதலில், பின்னர் அல்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ். ” என்றார்.

