இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்டில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்களை எடுத்திருந்தது. இந்த சூழலில் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தொடங்கினார்.
சொதப்பிய ஜெய்ஸ்வால்
அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 14வது சதத்தை நிறைவு செய்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 669 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணியை விட 311 ரன்களையும் முன்னிலையாக பெற்றது. 311 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையுடன் இங்கிலாந்து அணி பவுலர்கள் உற்சாகமாக 2வது இன்னிங்சை தொடங்கினர்.
அதற்கேற்ப ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது கேஎல் ராகுல் – சுப்மன் கில் இணை கூட்டணி அமைத்தது. சுப்மன் கில் அதிரடியாக ரன்களை சேர்க்க, கேஎல் ராகுல் நிதானமாக ரன்களை சேர்த்தார்.
373 பந்துகள்
பின் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 2வது செஷன் முழுக்க இருவரும் விக்கெட் கொடுக்காமல் விளையாட, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். பின், கடைசி செஷனில் சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அரைசதம் கடக்க, இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் கடைசி வரை விக்கெட்டை கொடுக்கவில்லை.
4வது நாளின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்திருந்தது. கேஎல் ராகுல் 210 பந்துகளில் 87 ரன்களையும்,. சுப்மன் கில் 167 பந்துகளில் 78 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் மொத்தமாக 373 பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாக ஆடி இருக்கின்றனர். இதனால் இந்திய அணி டிரா செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

