இன்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனல் போட்டியில் மும்பையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. மேலும் நேற்று நடைபெற்ற முதல் செமி பைனலில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் மறைமுகமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாது என்று கூறியிருக்கிறார். மேலும் கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைகளில் செமி பைனலில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வந்திருக்கின்றன. இதில் இரண்டு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மோதிக்கொள்ள இருக்கின்றன.
இந்த நிலையில் இது குறித்து பதிவு செய்துள்ள கெவின் பீட்டர்சன் “ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளப் போகின்றன. இந்தப் போட்டி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் கெவின் பீட்டர்சன் இந்தியா இறுதிப் போட்டிக்கு வராது என மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். தற்போது இவரது கருத்துக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதில் அளித்து வருகிறார்கள்.

