இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. குறுகிய இடைவெளிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. எனவே பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோஹித் சர்மா 14 பந்துகளில் 5 ரன்களுக்கு ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 17 ரன்களில் நடையைக் கட்டினார். வெளிநாட்டு ஆடுகளங்களில் பெரிதும் சோபிக்காத கில் இந்த முறையும் இரண்டு ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பிறகு களத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சாய்ந்து கிடந்த இந்திய அணியை சற்று தூக்கி நிறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறிது நேரம் களத்தில் நின்ற இந்த ஜோடி விராட் கோலி 38 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய கேஎல் ராகுல் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 70 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். அவருக்கு சிறிது நேரம் கம்பெனி கொடுத்த சர்துல் தாகூர் 24 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்துள்ளது.
கேஎல் ராகுல் இன்றும் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. தென்னாபிரிக்கா அணித் தரப்பில் ரபாடா 5 விக்கட்டுகளையும், பர்கர் 2 விக்கெட்டுகளையும், ஜான்சன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர். இந்த ஆடுகளம் முழுக்க வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாகவே மாறி உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கர் குறித்து கருத்துக் கூறியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்,
“எனக்கு பர்கரின் அதிவேகமாக பந்து வீசும் திறனும், துல்லியமாக பிட்ச் செய்யும் விதமும் பிடித்துள்ளது. மேலும் அவரிடம் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால், அவர் பந்து வீசி முடித்துவிட்டு இந்திய பேட்ஸ்மேன்களைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்.
அதை அவர் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அது சிறிய வெற்றியை கொடுக்கும். எனவே இதை அவர் கருத்தில் கொண்டு பந்தை நல்ல வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் வீச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

