இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் ரன் அவுட்
அதேபோல் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயரின் ஆட்டமும் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ஏனென்றால் 6 இன்னிங்சில் ஆடி இருக்கும் கருண் நாயர், ஒரு இன்னிங்சில் கூட அரைசதம் அடிக்கவில்லை. இதற்கு பதிலாக சாய் சுதர்சனை களமிறக்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.
இதுதொடர்பாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த போட்டியின் திருப்புமுனை என்று சொல்ல வேண்டுமென்றால், முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் விக்கெட்டை கூறுவேன். உணவு இடைவேளைக்கு முன் பென் ஸ்டோக்ஸ் அடித்த ரன் அவுட், இந்திய அணி பெற வேண்டிய முன்னிலையை கட்டுப்படுத்திவிட்டது. அதுதான் இங்கிலாந்து அணி பக்கம் ஆட்டம் மாறவும் காரணமாகியது.
கருண் நாயர் விக்கெட்
2வது இன்னிங்சை பொறுத்தவரை இந்திய அணி 40 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கருண் நாயரின் கவனச்சிதறால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரின் விக்கெட் மேலும் 2 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுக்க காரணமாகிவிட்டது. அவர் ஆட்டமிழந்ததை விடவும், ஆட்டமிழந்த நேரம் மிகவும் தவறானது. அதுபோன்ற நேரங்களில் எந்த அணியும் விக்கெட்டை கொடுக்க கூடாது.
இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. ஏனென்றால் கடைசி 2 விக்கெட்டுகளை வைத்து கொண்டு இந்திய அணி 82 ரன்களை சேர்க்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஜடேஜா டெய்லண்டர்களை வைத்து கொண்டு 22 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். டாப் ஆர்டர் வீரர்களில் 4வது நாளில் கொஞ்சம் மூளையுடன் செயல்பட்டிருந்தால், முடிவு இந்திய வசமாக மாறி இருக்கும் என்று கூறியுள்ளார்.

