விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகிய 4 பேரும் ஃபேப் 4 வீரர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். இதில் 2016 முதல் 2019 வரை விராட் கோலி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கு பின் ஜோ ரூட் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். தற்போது விராட் கோலியை தவிர்த்து மற்ற மூன்று வீரர்களும் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேன் வில்லியம்சன் சம்பவம்
டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் இவர்கள் மூவருமே ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வெற்றி பெற வைத்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி அறிமுக வீரர் ப்ரீட்ஸ்கிவின் அபார ஆட்டத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்களை குவித்தது.
இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் – டெவான் கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது, யங் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் டெவான் கான்வே – கேன் வில்லியம்சன் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை குவித்தது. 2வது விக்கெட்டுக்கு இருவரும் 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
47வது சதத்தை விளாசிய கேன் மாமா
டெவான் கான்வே 97 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் கேன் வில்லியம்சன் 72 பந்துகளில் தனது 14வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியாக 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 113 பந்துகளில் 2 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 133 ரன்களை விளாசினார்.
இந்தப் போட்டியில் அடித்த சதம் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் 47 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை விரைவாக விளாசிய 2வது வீரர் என்ற சாதனையையும் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலமாக முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கேன் வில்லியம்சன் மட்டுமல்லாமல் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் சதங்களாக விளாசி வருகின்றனர். ஆனால் விராட் கோலியோ ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளுக்கு மீண்டும் மீண்டும் விக்கெட்க்டை பறி கொடுத்து வருகிறார். இதனால் ஃபேப் 4ல் விராட் கோலி பின் தங்கிவிட்டதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

