ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் இருக்கிறது.
இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடியுள்ளது. ஆனால் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் துபாய் மைதானங்களில் ஆடி இருக்கிறது.
வில்லியம்சன் கருத்து
இந்த சூழலில் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து நியூசிலாந்து ஜாம்பவான் கேன் வில்லியம்சன் கூறும் போது, பாகிஸ்தான் மற்றும் துபாய் மைதானங்கள் மற்றும் பிட்ச் இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளது. இந்த சாம்பியன்ஸ் தொடர் முழுக்கவே பிட்ச் ஒரே மாதிரி இருக்கவில்லை.
இந்திய அணிக்கு எதிரான கடந்த ஆட்டம் எங்களுக்கு கொஞ்சம் சிறந்த பிட்சாக இருந்தது. இந்திய அணியின் சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் கடந்த ஆட்டத்தில் கிடைத்த கற்றலை வைத்து இறுதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். இறுதிச்சுற்றில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது சிறந்த ஆட்டமாக இருக்கும்.
இறுதி ஆட்டத்திற்கு முன் ஓய்வு
இந்திய அணி துபாயில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறது. அது முன்பே திட்டமிட்ட ஒன்றுதான். எங்களின் கவனம் அடுத்த ஆட்டத்தில், எதிரணி மீதும், பிட்சிலும் மட்டுமே உள்ளது. நாங்கள் ஒரு ஆட்டத்தில் துபாய் பிட்சில் ஆடியுள்ளோம். அதில் இருந்தே பிட்ச் வித்தியாசமானது என்று புரிந்து கொண்டோம். அதனால் அதில் கிடைத்த பாசிட்டிப் விஷயங்களை வைத்து திட்டமிட வேண்டும்.
இறுதிப்போட்டிக்கு இன்னும் 2 – 3 நாட்கள் இருப்பதால், எங்களால் சிறப்பாக திட்டமிட்டு தயாராக முடியும். இறுதிச்சுற்றில் ஆடுவதற்காக ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்பதால், இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

