உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த சூழலில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மூலமாக தொடங்குவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சச்சின் சாதனையை முறியடிப்பாரா?
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட்டிற்கு பிரம்மாண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதுவரை 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 13,006 ரன்களை விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசியவர் பட்டியலில் ஜோ ரூட் 5வது இடத்தில் இருக்கிறார்.
இதில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க இன்னும் 373 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது. இதனை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிராக மட்டும் 30 போட்டிகளில் விளையாடி 2,846 ரன்களை விளாசி இருக்கிறார். அதில் 10 சதங்கள், 11 அரைசதங்களும் அடங்கும்.
ஜோ ரூட் ஃபார்ம்
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் ஜோ ரூட் 22 டெஸ்ட் போட்டிகளில் 40 இன்னிங்ஸில் விளையாடி 7 சதங்கள், 7 அரைசதங்களை விளாசி 1,968 ரன்களை விளாசி இருக்கிறார். மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் அவர், இன்னும் 2 ஆண்டுகள் இதே ஃபார்மை தொடர்ந்தால் எளிதாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்.
ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு ஜோ ரூட்டிற்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை விளாசி இருக்கிறார். ஜோ ரூட்டிற்கு இன்னும் சுமார் 2,900 ரன்கள் மட்டுமே தேவை இருப்பதால், இங்கிலாந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.