இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு பின் இந்த கேப்டன்சி பதவி பும்ராவுக்கு தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து சுப்மன் கில்லை நியமனம் செய்துவிட்டனர்.
இதனால் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் பும்ராவுக்கு காயம் ஏற்படுவதை காரணமாக காட்டி கேப்டன்சி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் பிசிசிஐ நிர்வாகிகள் அறிவித்தனர்.
பும்ரா பேட்டி
இந்த சூழலில் பும்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது, உடனடியாக என்னுடைய வேளைப் பளு குறித்து மருத்துவர்கள், பிசியோ மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். குறிப்பாக எனது முதுகில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ஆலோசனை நடத்தினேன்.
அதனால் இனி வேலைப்பளுவில் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதன் காரணமாக என்னை அடுத்த கேப்டனாக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். ஏனென்றால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்னால் முழுமையாக விளையாட முடியாது. பிசிசிஐ நிர்வாகம் என்னை அடுத்த கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்தது உண்மை தான்.
கேப்டன்சியை விட்டுக் கொடுத்தேன்
ஆனால் அது சரியாக இருக்காது. ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் ஒரு கேப்டனுடன் இந்திய அணி விளையாடுவது சரியாக இருக்காது. என்னைவிட எப்போதும் இந்திய அணி தான் முக்கியம். கேப்டனாக அல்லாமல் ஒரு வீரராகவும் என்னால் இந்திய அணிக்கு அதிக பங்களிப்பை செய்ய முடியும். கேப்டன் இருந்தாலும், அணிக்குள் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் தலைவனாக இருப்பேன்.
என்னால் விளையாட முடியாத போது, உடலை வருத்தி கொள்ள விரும்பவில்லை. இந்திய அணியின் நலன் கருதி, நீண்ட கால பயனை சிந்தித்து முடிவு எடுத்துள்ளேன். எனக்கு கேப்டன்சியை விடவும் கிரிக்கெட் அதிகம் பிடிக்கும். அதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோலுக்கு என்னை கருத வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

