இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
பும்ரா மிரட்டல்
இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டங்க் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி – டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே கிராலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் போப் – டக்கெட் இணை அதிரடியாக ரன்களை சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 122 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய டக்கெட் உணவு இடைவேளைக்கு பின் பும்ரா வீசிய பந்தில் 62 ரன்களுடன் போல்டாகி வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 126 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.
வாசிம் அக்ரம் சாதனை முறியடிப்பு
இந்த 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக பும்ரா மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆசியாவில் இருந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார். மொத்தமாக 60 இன்னிங்ஸில் ஆடியுள்ள பும்ரா 147 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இதன் மூலமாக 55 இன்னிங்ஸ்களில் 146 விக்கெட்டுகளை வீழ்த்திய வாசிம் அக்ரமின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்பின் 3வது இடத்தில் அனில் கும்ப்ளே 67 இன்னிங்ஸில் 141 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 71 இன்னிங்ஸில் 130 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 63 இன்னிங்ஸில் 123 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.

