இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் சேர்க்க நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. முதல் செஷனிலேயே இந்திய அணி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், வாஷிங்டன் சுந்தர் அட்டாக்கில் வந்து மிடில் ஆர்டரை தூக்கினார்.
பும்ரா சாதனை
இறுதியாக டெய்லண்டர்களை பும்ரா எளிதாக முடித்து கட்டினார். இதனால் இங்கிலாந்து அணி வெறும் 192 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொத்தமாக இந்த போட்டியில் பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலமாக இங்கிலாந்து மண்ணில் ஜஸ்பிரிட் பும்ரா புதிய சாதனையை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, மொத்தமாக 49 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இஷாந்த் சர்மாவின் சாதனை
இதற்கு முன்பாக இந்திய ஜாம்பவான் இஷாந்த் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். அதேபோல் கபில் தேவ் 13 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளையும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளையும், பிஷன் சிங் பேடி 12 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் இந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் பும்ரா மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அதில் 2 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

