இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்காததற்கு ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடே காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்திய அணி கடைசி ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, ரிங்கு சிங்கை நம்பாமல் ரவீந்திர ஜடேஜா சில செயல்பாடுகளை செய்ததால் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் குறைவான ரன்களே எடுத்த இந்திய அணி, தென்னாப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இன்னிங்சைத் தொடங்கிய கில்லும், ஜெய்ஸ்வாலும் டக் அவுட்டாகினர்.
ரன் கணக்கைத் துவங்குவதற்கு முன்பே இரண்டு விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதற்குப் பிறகு வந்த திலக் வர்மா அணியை ஓரளவு சரிவிலிருந்து காப்பாற்றினார். அவர் 20 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 29 ரன்கள் குறித்து ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி கட்டத்தில் களமிறங்க வேண்டிய ரிங்கு சிங் சற்று முன்னரே ஆட வந்தார்.
மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சூர்யகுமார் யாதவ்.
இவரும் ரிங்கு சிங்கும் அதிரடியாக விளையாடி ரண்களை குவித்துக் கொண்டிருந்தனர். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்த நிலையில் சம்சி வீசிய ஒரு ஓவரில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடினாலும், நன்கு செட்டில் ஆன ரிங்கு சிங் பவுலர்களை பதம் பார்த்துக் கொண்டு இருந்தார். 19வது ஓவரில் ரிங்கு சிங் இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். 20வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா சரியாக கனெக்ட் செய்யாமல் போக அது பீல்டரின் கையில் சென்றது. 1 ரன் மட்டுமே ஓடி ரிங்கு சிங்கிடம் ஸ்ட்ரைக் கொடுக்காமல் 2 ரன் ஓடி அடுத்த பந்தையும் அவரே ஆட முடிவு செய்தார்.
இதனால் 2 வது பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க, 3 வது பந்தை எதிர் கொண்ட ஜித்தேஷ் சர்மாவும் ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டது. இதனால் ரிங்கு சிங் கடைசி ஓவரை ஆடாமலே வெளியேறினார். இதனால் ரசிகர்கள் “ஜடேஜா, ரிங்குவிடம் ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும். அவராவது 2 சிக்சர்களை அடித்திருப்பார். இதுதான் நான் உயர்ந்தவன், சூப்பர் ஸ்டார் என்று நினைக்கும் சீனியர் வீரர்களின் பிரச்சினை” என்று கூறுகிறார்கள்.

