இந்திய டி20 அணியில் சில போட்டிகளிலேயே மிகவும் முக்கியமான பேட்ஸ்மேனாக மாறியிருக்கும் இஷான் கிஷான் தான் எதிர்த்து விளையாடியதில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார்.
இஷான் கிஷான் அதிரடியான பேட்ஸ்மேனாக இருந்த போதிலும் கூட அவரை கஷ்டப்படுத்திய பின்னரும் இருந்திருக்கிறார் என்று அவர் கூறியது ஆச்சரியப்படும் விதமாக உள்ளது. மேலும் அவரை சிரமப்படுத்திய இரண்டு பவுலர்களுமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஷான் கிஷான் கூறும்பொழுது “இதில் ஸ்பின்னர்கள் என்று எடுத்துக் கொண்டால் சாகல் பாய் இருப்பார். அவர் என் பேட்டிங்கை பற்றி நிறைய அனாலிசிஸ் செய்திருக்க கூடும். வேகப்பந்துவீச்சாளர் என்றால் வேறு யாரை சொல்ல முடியும் பும்ரா பாய்தான். அவரைத் தாண்டி வேறு யார் இருக்கப் போகிறார்கள். ஆனால் போகிற இடத்தில் எல்லாம் என்னையே சொல்கிறாயா என்று அவர் கோபப்பட கூட செய்யலாம். அதே சமயத்தில் நீங்கள் போட்டியில் விளையாடுவது போல வலைப் பயிற்சியில் விளையாடும் ஆடுகளங்கள் இருக்காது”
“நீங்கள் வலைப்பயிற்சியில் விளையாடும் பொழுது பந்து வித்தியாசமாக பல மாதிரியாக வரும். பும்ரா பாயை வலைப் பயிற்சியில் விளையாடும்போது ஒரு பந்தை பேட்டின் நடுவில் வாங்கி சரியாக ஆகிவிட்டால், அடுத்த பந்து பவுன்சர்தான் வரும். மற்றவர்கள் நம்ம பையன் தானே என்று நினைத்துக் கொஞ்சம் மெதுவாக வீசுவார்கள். ஆனால் பும்ரா பாய் அப்படி கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

