இந்திய கிரிக்கெட் அணி இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகவும் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணையின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, கடந்த இரண்டு போட்டிகளாக ரன்களை வாரி வழங்குகிறார். மேலும் இவரது பவுலிங் திட்டத்தை பேட்ஸ்மேன்கள் முன்பே கணித்து விடுவதால் இவருக்கு பந்து வீசுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சனைகளை விரைவில் கண்டறிய வேண்டும் என்று இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “வருண் சக்கரவர்த்தி இந்த டி20 உலக கோப்பை தொடரில் 63 சதவீதம் ஷார்ட் பந்துகளை வீசி இருக்கிறார். என்னை பொருத்தவரை இது மிகவும் அதிகமாகும். ஒருவேளை அவர் இந்த மாற்றத்தை திட்டமிட்டு செய்திருந்தால் அது பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே விரைவாக அவர் இது குறித்து யோசித்து அதற்கான தீர்வை காண வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

